×

தனியார் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் யூகி சேதுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் நிறுவன உரிமையாளரிடம் வாங்கிய கடன் தொகை ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர நடிகர் யூகி சேதுவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தடம் பதித்த நடிகர் யூகி சேது என்ற சேதுராமன் தேனாம்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ஆர்.சுரேஷ்குமாரிடம் 2017ம் ஆண்டு 50 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், உத்தரவாத தேதியில் கடனை திரும்ப செலுத்தவில்லை.

இதையடுத்து, யூகி சேதுவுக்கு எதிராக, சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் சார்பில், பொது அதிகாரம் பெற்ற அவரது மருமகன் அஸ்வனிகுமார் தலால் சிவில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடன் தொகை வங்கி வட்டியுடன் சேர்த்து 64 லட்சத்து 8,822 ரூபாயை 7 சதவீத வட்டியுடன் வழங்குமாறு யூகி சேதுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, யூகி சேது தரப்பில், தன்னை துன்புறுத்தும் நோக்கில் போலியாக ஆவணங்களை உருவாக்கி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் கூறியுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்து தன்னுடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, கடன் தொகையை பெறும்போதே, அதை எப்போது திருப்பி அளிப்பேன் என்ற விவரங்களை குறிப்பிட்டு, ஆவணங்களில் பிரதிவாதி கையெழுத்திட்டுள்ளார்.

அவர் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி மனுதாரரின் பொது அதிகாரம் பெற்ற அஸ்வனிகுமார் தலால் பலமுறை யூகி சேதுவிடம் கேட்டுள்ளார். மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கையெழுத்து, கடன் பெற்றவரின் கையெழுத்து என்பது உறுதியாகியுள்ளது. எனவே, யூகி சேது கடன் தொகை ரூ.50 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post தனியார் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் யூகி சேதுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Yuki Sethu ,Chennai ,Chennai City Civil Court ,Court ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...